உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் இன்று காலை பள்ளி பேருந்துகள் மோதி நடந்த கோர விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாத்ரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரூப்வாஸ் கிராமம் அருகே காலை 7:30 மணியளவில் அதிவேகமாக வந்த பள்ளி பேருந்து ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு பள்ளி பேருந்து மீது பயங்கரமாக மோதியது.
ஜீசஸ் மேரி பள்ளிக்குச் சொந்தமான பேருந்தும், ராம் யக்யா பள்ளி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட இந்த விபத்தில், பேருந்துகளின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. விபத்தின் போது ஜீசஸ் மேரி பள்ளி பேருந்தில் சுமார் 25 மாணவர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் 12-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.
👉ग्रेटर नोएडा में दर्दनाक घटना, CCTV मे कैद
👉दो स्कूल बसों की भीषण टक्कर,
👉12 से ज्यादा मासूमों को आई गंभीर चोटें; मची चीख-पुकार#GreaterNoida pic.twitter.com/LgBcdXJQoH— Journalist Ravendra kumar (@Chhotukingoffi1) April 13, 2026
விபத்து நடந்தவுடன் மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த கிராம மக்கள், உடனடியாக மீட்புப் பணியில் இறங்கினர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார், பொதுமக்களின் உதவியுடன் காயமடைந்த மாணவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பல மாணவர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பெரும் போராட்டத்திற்குப் பிறகு பேருந்து ஓட்டுநரும் பத்திரமாக மீட்கப்பட்டார். இந்த விபத்தின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பார்ப்போரை நிலைகுலைய வைத்துள்ளது. அதிவேகமே இந்த விபத்திற்குக் காரணம் எனக் கூறப்படும் நிலையில், போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
