சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் கிரசன்ட் ரோடு ஷெனாய் நகரைச் சேர்ந்தவர் நீரஜா(30). இவர் பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் பணி பெண்ணாக வேலை பார்ப்பவர் பவானி (30). இந்த நிலையில் நீரஜா தனது வீட்டில் உள்ள நகைகளை சரி பார்த்துக் கொண்டிருக்கும்போது சில நகைகள் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அண்ணா நகர் காவல் துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். ஆனால் அங்கு எந்த பொருளும் சேதமில்லாமல் நகைகள் திருடு போயிருந்தது.
இதுகுறித்து சந்தேகித்த காவல்துறையினர் அந்த வீட்டின் பணி பெண்ணான பவானியை அழைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பவானி தான் நகைகளை திருடி தனது கணவர் துர்கா பிரசாத் (38) இடம் கொடுத்ததாகவும் அவர் அதை அடகு கடையில் வைத்து பணம் வாங்கியதாகவும் தெரியவந்தது. உடனே அடகு கடையில் உள்ள 13.700 கிராம் தங்க நகைகளை மீட்டு நீரஜாவிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். மேலும் பவானியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் மகளிர் புழல் சிறையில் அடைத்தனர். அவரது கணவர் துர்கா பிரசாத்திடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.