திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி அருகில் ஆரம்பாக்கம் பகுதியில் டயர் வியாபாரம் பார்த்து வருபவர் கோமதி (38). இவர் சம்பவ நாளன்று கடையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் 3 பேர் கோமதியை கடைக்கு உள்ளே வைத்து பூட்டி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர் அணிந்திருந்த தாலி சங்கிலி, வளையல் மற்றும் அவர் செல்போன் ஆகியவற்றை பறித்துவிட்டு வேகமாக ஆட்டோவில் தப்பி சென்றுள்ளனர். இதன்பின்னர் கோமதி கடையின் ஷட்டரை திறந்து அருகில் உள்ள நபர்களிடம் நடந்ததை கூறி உதவி கேட்டார். மேலும் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கடை அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை வைத்து மற்றும்  மோப்ப நாய்கள் மூலம் அப்பகுதியில் தடயங்களை சேகரித்தும் வருகின்றனர். இதன் மூலம் சென்னையில் உள்ள திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார்(35), அமைஞ்சிகரையை சேர்ந்த கணேஷ்(34), மற்றும் தாம்பரத்தை சேர்ந்த தமிம் அன்சாரி (24) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இந்த 3 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு இருந்தனர். கடைக்குள் புகுந்து தங்க நகையை பறித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.