ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருக்கு மனைவி ஒருவர் உள்ளார். தம்பதிகள் இருவரும் இணைந்து டீக்கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இரவு மர்ம நபர் ஒருவர் கடைக்கு வந்து பணம் கொடுத்து சில பொருள்களை வாங்கிவிட்டு மீதி சில்லறையையும் வாங்கிவிட்டு சென்றுள்ளார். அந்த நேரம் அப்பகுதியில் மின்வெட்டு ஏற்பட்டு இருந்தது. மீண்டும் மின்சாரம் வந்த நிலையில் மர்ம நபர் கொடுத்த பணத்தைப் பார்த்த பன்னீர்செல்வம், அவரது மனைவியும் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த மர்ம நபர் கொடுத்த பணம் குழந்தைகள் விளையாடும் 110 ரூபாய் நோட்டு ஆகும். உடனே இது குறித்து பன்னீர்செல்வம் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விளையாட்டு நோட்டுகளை கொடுத்து பொருள் வாங்கி சென்ற நபரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.