தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிம்பு. இவர் நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு தற்போது சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற திரைப்படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். அதன் பிறகு பத்து தல திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக் மற்றும் கலையரசன் போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

கடந்த 2017-ம் ஆண்டு கன்னட சினிமாவில் வெளியான முப்ஃதி என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக பத்து தல திரைப்படம் உருவாகியுள்ள நிலையில், படத்தில் சிம்பு கேங்ஸ்டராக நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடலான நம்ம சத்தம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் டீசரும் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பத்து தல திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதை முன்னிட்டு தற்போது பத்துதல படத்தின் 2-வது பாடலின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க அவருடைய மகன் அமீன் 2-வது பாடலை பாடியுள்ளார். அவருடன் இணைந்து சக்தி ஸ்ரீ கோபாலும் பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் வரிகளை கபிலன் எழுதியுள்ளார். மேலும் நினைவிருக்கா என்று தொடங்கும் பத்து தல பாடத்தின் இரண்டாம் பாடலின் கிளிம்ஸ் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.