இந்தியாவில் மதச் சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, ஆர்.எஸ்.எஸ். மற்றும் ‘ரா’ அமைப்புகளுக்கு எதிராகத் தடை விதிக்க அமெரிக்க ஆணையம் பரிந்துரைத்துள்ள நிலையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்குத் தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. அதாவது அமெரிக்காவின் சர்வதேச மதச் சுதந்திரத்திற்கான ஆணையம் (USCIRF) வெளியிட்டுள்ள 2025-ஆம் ஆண்டிற்கான அறிக்கையில், இந்தியாவில் நிலவும் மதச் சூழல் கவலைக்கிடமாக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற வகுப்புவாத மோதல்களுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்புகளே காரணம். கட்டாய மதமாற்றத் தடைச் சட்டங்கள் மற்றும் வக்ஃப் வாரிய சட்டத் திருத்தங்கள் சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளன. அமெரிக்கக் குடிமக்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல் நிலவுவதால், இந்தியாவிற்கு ஆயுதங்கள் விற்பனை செய்வதையும், வர்த்தக உறவுகளையும் அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இந்தக் காரணங்களைக் காட்டி, ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’ (R&AW) ஆகியவற்றின் மீது இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தடைகளை விதிக்க ட்ரம்ப் நிர்வாகத்திற்கு அந்த ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
இந்த விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைதளப் பக்கத்தில் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்காமல், மனுஸ்மிருதியின் படி நாட்டை நடத்தத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, தேசத்தின் ஒற்றுமைக்கும் சகோதரத்துவத்திற்கும் விஷம் போன்றது. காந்தி படுகொலைக்குப் பிறகு சர்தார் வல்லபாய் படேல் இந்த அமைப்பிற்குத் தடை விதித்தார். தற்போது சர்வதேச அமைப்பும் இந்த அமைப்பு அச்சுறுத்தல் என எச்சரித்துள்ளது. எனவே, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு உடனடியாகத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.
அமெரிக்க ஆணையத்தின் இந்தக் குற்றச்சாட்டுகளை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் முற்றிலுமாக நிராகரித்துள்ளது. “இந்த மதிப்பீடுகள் ஒருதலைப்பட்சமானவை மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட சமூக அமைப்பைக் கொச்சைப்படுத்தும் நோக்கில் இது போன்ற அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன” என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும் அமெரிக்காவின் இந்தப் பரிந்துரையும், காங்கிரஸின் கோரிக்கையும் இந்திய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.
