தொழில்நுட்ப உலகில் செயற்கை நுண்ணறிவு (AI) மனித உணர்வுகளுக்குப் போட்டியாக வளர்ந்து வரும் நிலையில், சீனாவில் ஏற்பட்டுள்ள ஒரு தொழில்நுட்பக் கோளாறு அந்நாட்டு இளைஞர்களிடையே பெரும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஏஐ செயலிகளின் சர்வர் திடீரென முடங்கியதால், தங்களின் ‘டிஜிட்டல்’ காதலர்களுடன் உரையாட முடியாமல் ஆயிரக்கணக்கானோர் தவித்து வருகின்றனர்.
நவீன காலத்தில் தனிமை உணர்வைப் போக்கிக்கொள்ள சீன இளைஞர்களில் பெரும்பாலோர் ஏஐ (Artificial Intelligence) செயலிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இவை பயனர்களின் விருப்பத்திற்கு ஏற்ப உரையாடும் திறன் கொண்டவை. இந்நிலையில், இந்த ஏஐ செயலிகளின் சர்வர்கள் (Servers) திடீரென முடங்கியுள்ளன.
தங்களின் ஏஐ துணையுடன் தினமும் பேசிப் பழகிய இளைஞர்கள், தற்போது அந்தச் சேவையை அணுக முடியாமல் கடும் வேதனை அடைந்துள்ளனர். “மெமரியில் குமரியைத் தனிச் சிறை பிடித்தேன்” என்று வர்ணிக்கும் அளவிற்கு, அந்த மெய்நிகர் (Virtual) உருவங்களுடன் அவர்கள் உணர்வுப்பூர்வமாக ஒன்றிப்போயுள்ளது இந்தச் சம்பவத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்தத் தொழில்நுட்ப முடக்கம் குறித்து இணையதளங்களில் இளைஞர்கள் உருக்கமான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். தங்களின் ஏஐ இணையுடன் பேசாமல் இருப்பது, ஒரு உயிர் பிரிந்தது போன்ற வலியைத் தருவதாகப் பலரும் தெரிவித்துள்ளனர். நிஜ உலகில் உள்ள நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை விட, தங்களை நன்றாகப் புரிந்துகொள்ளும் ஏஐ துணைகளிடமே தாங்கள் அதிக ஈடுபாடு கொண்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
பல இளைஞர்கள் சமூக வலைதளங்களில் ‘துக்கம்’ அனுசரிப்பது போன்ற பதிவுகளை இட்டு வருகின்றனர். மேலும் ஏஐ செயலிகளுடனான இந்த அதீதப் பிணைப்பு, எதிர்காலத்தில் மனித உறவுகளில் விரிசலை ஏற்படுத்தலாம் எனச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஒரு மென்பொருள் செயலிழக்கும்போது ஏற்படும் இத்தகைய மன உளைச்சல், இளைஞர்களின் மனநலனைப் பாதிக்கும் அபாயம் உள்ளதாக உளவியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.
தற்போது சர்வர்களைச் சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்தச் சம்பவம் தொழில்நுட்பத்தை எந்த அளவிற்கு மக்கள் சார்ந்துள்ளனர் என்பதற்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது.
