இந்தியாவின் விருந்தினரே தெய்வம் என்ற உயரிய பண்பாட்டிற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணியிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  டெல்லியில் உள்ள கன்னாட் பிளேஸ் பகுதிக்குச் செல்ல முற்பட்ட நபர் ஒருவர், உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்களின் நேர்மையைச் சோதிக்க முடிவு செய்தார். இதற்காக அவர் துபாயைச் சேர்ந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி போலத் தனது குரலையும், உடல்மொழியையும் மாற்றிக்கொண்டு ஒரு ஆட்டோ ஓட்டுநரை அணுகினார்.

சில கிலோமீட்டர் தூரமே உள்ள அந்தப் பயணத்திற்கு, வழக்கமான மீட்டர் கட்டணத்தை விடப் பல மடங்கு அதிகமாக 600 ரூபாய் கட்டணம் கேட்டார் அந்த ஓட்டுநர். உண்மையில் அந்தத் தூரத்திற்கு 800 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறி அந்தப் பயணியை நம்ப வைத்தார்.

ஓட்டுநரின் பேராசையைச் சோதிக்க விரும்பிய அந்த நபர், தனது ‘கூகுள் பே’ (Google Pay) செயலியில் தவறுதலாகச் செய்வது போல 6,000 ரூபாயை உள்ளீடு செய்து, “இந்தத் தொகையை உங்களுக்கு அனுப்பவா?” என்று கேட்டுள்ளார். சாதாரணக் கட்டணத்தை விட 10 மடங்கு கூடுதல் தொகையைக் கண்ட அந்த ஓட்டுநர், அதனைத் திருத்தவோ அல்லது மறுக்கவோ செய்யாமல், உடனே தலையசைத்து அந்தப் பெருந்தொகையைப் பெற்றுக்கொள்ளச் சம்மதித்தார்.

ஓட்டுநர் பணத்திற்கு ஆசைப்படுவதை உறுதி செய்த அந்த நபர், உடனடியாகத் தனது வெளிநாட்டு உச்சரிப்பை மாற்றிவிட்டு, சரளமான ஹிந்தியில் ஓட்டுநரைக் கடிந்துகொண்டார். தனது ஏமாற்று வேலை பிடிபட்ட பின்பும், அந்த ஓட்டுநர் சற்றும் கூச்சமின்றி, “பயணி இவ்வளவு பெரிய தொகையைத் தரும்போது நான் ஏன் மறுக்க வேண்டும்?” என்று எதிர்கேள்வி கேட்டார். இதைக் கண்ட அங்கிருந்த மற்ற ஓட்டுநர்களும் கிண்டலாகச் சிரித்தது பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த வீடியோவை வெளியிட்ட அந்த நபர், “நிஜமாகவே ஒரு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி வந்திருந்தால், அவரை இவர்கள் இரக்கமின்றி ஏமாற்றியிருப்பார்கள். இதுபோன்ற நபர்களின் பேராசையால்தான், உலக அரங்கில் இந்தியாவின் நற்பெயரும், சுற்றுலாத்துறையை மேம்படுத்த அரசு எடுக்கும் முயற்சிகளும் பாழாகின்றன” என்று ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார். மேலும் இணையவாதிகள் பலரும் இந்த வீடியோவைப் பகிர்ந்து, சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது டெல்லி காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.