ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது இரண்டாவது சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியதை அடுத்து, நாடு முழுவதும் உள்ள ஆர்சிபி ரசிகர்கள் நள்ளிரவில் வீதிகளில் இறங்கி பிரம்மாண்ட கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட அணிகளில் ஒன்றான ஆர்சிபியின் இந்த வரலாற்று வெற்றியை, ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மேள தாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்து விடிய விடியக் கொண்டாடினர்.
இருப்பினும், இந்த அசாத்திய மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களுக்கு இடையே பல நகரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல், பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் சட்டம் ஒழுங்கு மீறல் போன்ற விரும்பத்தகாத சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.
View this post on Instagram
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் பல்வேறு வீடியோக்களில், ஆர்சிபி ரசிகர்கள் பெருந்திரளாகக் கூடி சாலைகளை முழுமையாக முடக்கி, பொதுப் போக்குவரத்திற்குப் பெரும் முட்டுக்கட்டை போட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குறிப்பாக, ஹைதராபாத்தில் ரசிகர்கள் எல்லையற்ற உற்சாகத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தபோது, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர அங்குள்ள போலீஸார் தடியடி கொண்டு கூட்டத்தைக் கலைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதேபோல், ஆந்திர மாநிலம் கர்னூலிலும் ஆர்சிபி ரசிகர்கள் வீதிகளில் திரண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டதால், பொதுமக்களின் நடமாட்டம் பாதிக்கப்பட்டு, பின்னர் உள்ளூர் போலீஸார் தலையிட்டுச் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டினர். இந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து, “ரசிகர்களின் கொண்டாட்டம் நியாயமானது என்றாலும், பொதுப் பாதுகாப்பு மற்றும் பொறுப்புணர்ச்சியுடன் கொண்டாட பழக வேண்டும்” என நெட்டிசன்கள் பலரும் தங்களது மாறுபட்ட கருத்துகளைப் பகிர்ந்து விவாதித்து வருகின்றனர்.
