அண்மையில் நிறைவடைந்த ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வர்த்தக முறைப்படி (Trade) லக்னோ  சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணைந்த அர்ஜுன் டெண்டுல்கரின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி, தற்போது ரசிகர்களிடையே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இந்த சீசனின் பெரும்பாலான போட்டிகளில் லக்னௌ அணியின் மாற்று வீரர்கள் வரிசையிலேயே  அமரவைக்கப்பட்டிருந்த சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன், நடப்புத் தொடரின் தங்களது கடைசிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்று, ஒரு முக்கிய விக்கெட்டையும் வீழ்த்தி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில், தற்போது மைதானத்திற்கு வெளியே அவர் செய்த ஒரு செயல், சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர் பட்டாளத்தை மேலும் உயர்த்தியுள்ளது.

 

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், அர்ஜுன் டெண்டுல்கர் ஒரு முக்கிய நிகழ்ச்சிக்குச் செல்வதற்காக விடுதி ஒன்றின் வரவேற்பு அறை வழியாக மிகவும் தாமதமாக, அவசரமாக ஓடிக்கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த இரண்டு ரசிகர்கள் அவருடன் ‘செல்ஃபி’ புகைப்படம் எடுக்க விரும்பிக் கேட்டுள்ளனர். தனக்கு நேரமில்லாத சூழலிலும், அவர்களின் வேண்டுகோளை நிராகரிக்காமல் முதல் ரசிகருடன் அர்ஜுன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். தொடர்ந்து அவர் வேகமாக ஓட முயன்றபோது, மற்றொரு ரசிகரும் அவரிடம் புகைப்படம் எடுக்கக் கோரினார்.

அந்தத் தருணத்தில் அர்ஜுனின் முகத்தில் லேசான சோர்வும் அசெளகரியமும் தெரிந்தபோதிலும், அவர் அமைதியாக அந்த ரசிகருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டு உடனடியாகத் தனது நிகழ்ச்சிக்கு விரைந்தார். இந்த வீடியோவை விவரித்துள்ள நெட்டிசன்கள், அர்ஜுனின் முகபாவனை அவரது கர்வத்தைக் காட்டவில்லை என்றும், மாறாக அவர் கேமராக்கள் முன் தோன்றுவதற்குத் தயங்கும் ஒரு கூச்ச சுபாவமுள்ள  பண்பான இளைஞர் என்பதை இது நிரூபிப்பதாகவும் கூறி, அவரது நற்பண்பை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.