தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக ஜொலித்தவர் ராமராஜன். இவர் அரசியலில் கவனம் செலுத்த ஆரம்பித்ததால் மார்க்கெட் சரிந்தது. கடந்த 2012-ம் ஆண்டு வெளியான மேடை திரைப்படத்தில் ராமராஜன் கடைசியாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 11 வருடங்களுக்குப் பிறகு தற்போது நடிகர் ராமராஜன் சாமானியன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் ராமராஜன் முதல் முறையாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். ராமராஜனின் இத்தனை வருட சினிமா பயணத்தில் அவர் கலந்து கொண்ட முதல் டிவி நிகழ்ச்சி இதுவாகும். இந்த நிகழ்ச்சியின் போது பிக்பாஸ் பிரபலம் அமுதவாணன் ராமராஜன் போன்று பர்ஃபாமன்ஸ் செய்தார். இதைப் பார்த்து மகிழ்ந்த ராமராஜன் உடனே அமுதவாணனை பாராட்டியதோடு அவருக்கு தான் கையில் அணிந்திருந்த தங்க மோதிரத்தையும் பரிசாக கொடுத்தார். மேலும் ராமராஜனின் இந்த செயலை பார்த்த பார்வையாளர்கள் அனைவரும் நெகிழ்ந்தனர்.