உத்தரப் பிரதேச மாநிலம் புடான் மாவட்டத்தில் உள்ள பிப்ரௌலி கிராமத்தில் நடைபெற்ற ஓர் இறுதிச் சடங்கில் வழங்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட 200-க்கும் மேற்பட்டோருக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு எருமை மாட்டுப் பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட தயிரைக் கொண்டு செய்யப்பட்ட ரைத்தா வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த உணவு தயாரிக்கப் பால் கொடுத்த மாடு உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 26 ஆம் தேதி உயிரிழந்தது. அந்த மாட்டை வெறிநாய் கடித்திருந்ததும் அதன் காரணமாகவே அந்த மாடு உயிரிழந்ததும் பின்னர் தெரியவந்தது. இதனால் அந்த மாட்டின் பாலை உட்கொண்டவர்களுக்கு ரேபிஸ் தொற்று பரவி இருக்குமோ என்ற அச்சம் கிராம மக்களிடையே ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் உடனடியாக கிராமத்தில் முகாம் அமைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இது குறித்து மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி ரமேஷ்வர் மிஸ்ரா கூறுகையில் பாலை நன்கு சூடுபடுத்தி இருந்தால் கிருமிகள் அழிய வாய்ப்புள்ளதாகவும் ஆனால் இங்குப் பாலைத் தயிராக மாற்றி அப்படியே பயன்படுத்தியதால் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இறுதிச் சடங்கில் அந்த உணவைச் சாப்பிட்ட இருநூறுக்கும் மேற்பட்டோருக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் அந்த கிராம மக்கள் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.