கடந்த மாதம் இறுதியில் ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானதைத் தொடர்ந்து வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தப் போரின் தொடக்கத்தில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்ட நிலையில் தற்போது ஈரானின் முக்கியப் பாதுகாப்பு அதிகாரிகளும் ராணுவத் தளபதிகளும் இஸ்ரேல் ராணுவத்தால் குறிவைத்து அழிக்கப்பட்டு வருகின்றனர்.

ஈரானின் பாதுகாப்பு ஆலோசகர் அலி லரிஜானி மற்றும் முக்கிய ராணுவத் தளபதி குலாம்ரெசா சுலைமானி ஆகியோர் அடுத்தடுத்து கொல்லப்பட்டதை இஸ்ரேல் பாதுகாப்புப் படை உறுதி செய்துள்ளது. ஈரானின் முக்கியத் தலைவர்களை வேட்டையாடப் பிரதமர் நெதன்யாகு தனது நாட்டு ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளித்துள்ள நிலையில் ஈரானின் உளவுப்பிரிவு தலைவர் இஸ்மாயில் கதாயீப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி காட்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

உச்ச தலைவர் காமேனிக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் இவரது மரணம் குறித்து ஈரான் தரப்பிலிருந்து இதுவரை எந்த உறுதியான தகவலும் வெளியிடப்படவில்லை. அதே நேரத்தில் தனது முக்கியத் தலைவர்களின் மரணத்திற்குப் பழிவாங்குவோம் என்று ஈரான் சூளுரைத்துள்ளதால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் மேலும் சூழ்ந்துள்ளன.