அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போர் நடவடிக்கை தீவிரமடைந்துள்ள சூழலில் ஈரானுக்கு எதிராக உளவு பார்த்ததாக நூற்றுக்கும் மேற்பட்டோரை ஈரான் அரசு அதிரடியாகக் கைது செய்துள்ளது. இவர்கள் அனைவரும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுடன் இணைந்து கொண்டு அந்நாடுகளின் நலன்களுக்காகச் செயல்பட்டதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
கைதானவர்களைத் தேசத் துரோகிகள் என ஈரான் அரசு அறிவித்துள்ளதுடன் அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளது. ஈரானின் 31 மாகாணங்களில் 26 மாகாணங்களில் செயல்பட்டு வந்த அமெரிக்க ஆதரவு பெற்ற மற்றும் மன்னராட்சிக்கு ஆதரவான 111 நபர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஈரானுக்கு வெளியே உள்ள பயங்கரவாத ஊடகங்களுக்குத் தகவல் மற்றும் வீடியோக்களை அனுப்பிய இருபத்தியொரு பேரையும் ஈரான் உளவுத்துறை கைது செய்துள்ளது. சந்தேகத்திற்குரிய நபர்கள் குறித்துத் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இந்தச் சூழலில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஈரான் அரசு கடந்த 3 வாரங்களாக இணையதளச் சேவையை முழுமையாக முடக்கியுள்ளது.
இதன் காரணமாக 9 கோடிக்கும் அதிகமான மக்கள் இணையதள வசதி இன்றிப் பாதிக்கப்பட்டுள்ளனர். உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் உளவு வேலைகளைத் தடுக்க ஈரான் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கைகள் அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
