கென்யாவில் அரிய வகை எறும்புகளைச் சட்டவிரோதமாகக் கடத்த முயன்ற விவகாரத்தில், ஒரு சீன நாட்டவர் உட்பட இரண்டு பேர் மீது வனவிலங்கு கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நைரோபி விமான நிலையத்தில் சுமார் 2,000 உயிருள்ள எறும்புகளுடன் சிக்கிய சீன நபரிடம் நடத்திய விசாரணையில், கென்யாவைச் சேர்ந்த சார்லஸ் முவாங்கி என்பவர் இந்த எறும்புகளை வினியோகம் செய்தது வெளிச்சத்திற்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து முவாங்கியின் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள், ஊசிகளில் அடைக்கப்பட்ட 113 எறும்புகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எறும்புகளைப் பறிமுதல் செய்தனர். இந்த எறும்புகள் சீனா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளுக்குக் கடத்தப்படவிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது வெளிநாடுகளில் ‘செல்லப்பிராணி’ பிரியர்களிடையே எறும்புகளைக் கண்ணாடி கூண்டுகளில் அடைத்து வளர்க்கும் ஆர்வம் அதிகரித்துள்ளதே இந்தக் கடத்தலுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் யானைத் தந்தங்கள் கடத்தப்படுவதைப் போல, தற்போது அரிய வகை பூச்சிகளும் ‘பயோ-பைரசி’ முறையில் கடத்தப்படுவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு எறும்பு பல ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுவதால், இயற்கை சமநிலையைப் பாதிக்கும் இத்தகைய சட்டவிரோத வணிகத்தைத் தடுக்க கென்ய அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.