அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் நேற்று காலை ஒன்பது மணியளவில் வானைப் பிளந்து கொண்டு ராட்சத எரிகல் ஒன்று விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எரிபந்து போன்று பிரகாசமான ஒளியுடன் சென்ற இந்த எரிகல்லை ஓஹியோ மற்றும் பென்சில்வேனியா மாகாணங்களிலும் நியூயார்க் மற்றும் மிச்சிகன் நகரங்களிலும் மக்கள் பகல் நேரத்திலேயே தெளிவாகக் கண்டுள்ளனர்.

இந்த எரிகல் வளிமண்டலத்தில் நுழைந்தபோது பலத்த வெடிச்சத்தம் கேட்டுள்ளது. இது சுமார் இருநூற்று ஐம்பது டன் எடை கொண்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தால் ஏற்படும் அதிர்வுக்கு இணையான சத்தத்தை உண்டாக்கியுள்ளது. இதனால் வீடுகள் குலுங்கியதுடன் ஜன்னல் கண்ணாடிகளும் உடைந்து விழுந்ததால் அப்பகுதி மக்கள் ஏவுகணைத் தாக்குதல் அல்லது விமான விபத்து என எண்ணி அச்சத்தில் உறைந்து போயினர்.

நாசா விஞ்ஞானிகளின் ஆய்வின்படி சுமார் ஏழு டன் எடையும் இரண்டு மீட்டர் பரப்பளவும் கொண்ட இந்த விண்கல் மணிக்கு நாற்பத்தையாயிரம் மைல் வேகத்தில் பூமியின் வளிமண்டலத்தில் பாய்ந்து வந்துள்ளது. அப்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக அது வானிலேயே வெடித்துச் சிதறியுள்ளது.

ஈரி ஏரியின் நீர்ப்பரப்பிற்கு மேலே முதலில் தென்பட்ட இந்த எரிகல் சுமார் முப்பத்து நான்கு மைல்கள் காற்றில் பயணித்து ஓஹியோவின் கிளீவ்லேண்ட் நகரில் உள்ள வேலி சிட்டி பகுதியில் விழுந்திருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. விண்கல்லின் உடைந்த பாகங்கள் நிலப்பகுதியில் சிதறிக் கிடக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ள போதிலும் அது இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.