ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி இஸ்ரேலுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிந்தப்பட்ட ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும் இஸ்ரேல் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும்” என்றும், இந்த படுகொலைக்கு நிச்சயம் பழிவாங்கப்படும் என்றும் சூளுரைத்துள்ளார்.
மேலும் லாரிஜானியின் மறைவு ஈரானிய தேசத்திற்குப் பேரிழப்பு என்றாலும், இது போன்ற பயங்கரவாதச் செயல்கள் ஈரானின் உறுதியைக் குலைக்காது மாறாக இஸ்லாமிய தேசத்தின் போராட்ட உணர்வை மேலும் வலுப்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் மத்திய கிழக்கில் ஏற்கனவே பதற்றம் உச்சத்தில் உள்ள நிலையில், அலி லாரிஜானி மற்றும் பாசிஜ் தன்னார்வப் படைத் தலைவர் கோலம்ரெசா சுலைமானி ஆகியோரின் மரணம் ஈரானை மேலும் ஆவேசமடையச் செய்துள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் இத்தகைய கூட்டுத் தாக்குதல்கள் சர்வதேச போர் விதிகளை மீறுவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் லாரிஜானி ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட அறிஞர் மற்றும் ஈரானின் பாதுகாப்பு கட்டமைப்பில் முக்கிய தூணாக விளங்கியவர் என்று புகழாரம் சூட்டிய மொஜ்தபா, குற்றவாளிகள் விரைவில் தகுந்த தண்டனையை அனுபவிப்பார்கள் என்று உறுதியளித்துள்ளார். இந்த நிகழ்வுகள் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான நேரடிப் போரை புதிய கட்டத்திற்கு இட்டுச் சென்றுள்ளதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
