திருச்சியில் ஏப்ரல் 24-ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் மாபெரும் முப்பெரும் மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டுக்கு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தயாராகி வரும் நிலையில், தேனி மாவட்டத்தில் இருந்து ஒரு பெரிய படையை திருச்சிக்கு அழைத்துச் செல்ல ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முப்பெரும் விழா மாநாட்டை முன்னிட்டு தேனியில் உள்ள ஓபிஎஸ் பண்ணை வீட்டில் மாவட்டச் செயலாளர் சையது கான் தலைமையில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் ஓ. பன்னீர்செல்வம் பேசினார். அவர் பேசியதாவது, திருச்சியில் நடைபெறும் முப்பெரும் விழா மாநாட்டில் கலந்து கொள்ள அவரவர் தொகுதியில் இருந்து தொண்டர்களை திரட்டி கொண்டு வர வேண்டும். அனைவரும் அதிமுகவில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவு. அதைத்தான் நானும் சசிகலாவும் வலியுறுத்தி வருகிறோம்.

சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரிடமிருந்து முதல்வர் பதவியைப் பற்றி கடைசியில் அவர்களையே ஏமாற்றியவர் எடப்பாடி பழனிச்சாமி. தமிழ்நாட்டிற்கு முழுமையான ஜல்லிக்கட்டு போட்டியை பெற்று தந்தவர் பிரதமர் மோடி தான். உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் பிரதமர் மோடி தான். நான் கிடையாது. சையது கான் மற்றும் டிடிவி தினகரன் சந்திப்பை நான் இதுவரை தடுக்கவில்லை. மேலும் அவர் என்னையும் டிடிவி தினகரனையும் சமாதானப்படுத்தி சேர்த்து வைத்து விடுவார் என்று கூறினார்.