கிருஷ்ணகிரி சேர்ந்த மணிகண்டன்(29) என்பவர் தர்மபுரியில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு சமூக வலைதளம் மூலம் பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தில் வசிக்கும் டேனியல் செல்வராஜ்(25) என்பவர் அறிமுகமானார். இந்நிலையில் டேனியல் செல்வராஜ் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகவும், மாலத்தீவில் தற்போது 100 பேருக்கு நல்ல சம்பளத்தில் வேலை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பி மணிகண்டன் பல்வேறு நபர்களிடமிருந்து பணத்தை வாங்கி டேனியலுக்கு 23 லட்ச ரூபாய் வரை கொடுத்துள்ளார். அதன் பிறகு டேனியல் செல்வராஜ் அனுப்பிய பணி ஆணையை ஆய்வு செய்து பார்த்தபோது அது போலியானது என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் பணத்தை திரும்பி தருமாறு கேட்டதற்கு டேனியல் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து தர்மபுரி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் டேனியல் செல்வராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.