சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பூம்புகார் நகரில் வசிக்கும் விஜயராகவன் என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த டிசம்பர் மாதம் ஒரு புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, என்னை LINKEDIN என்ற இணையதளம் முகவரி வாயிலாக நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அவர் ஆயுர்வேத மூல பொருட்களை சப்ளை செய்வதற்கு ஒரு வணிக கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறோம். எனவே மூல பொருட்கள் வாங்குவதற்கு முதலீடு செய்தால் கமிஷன் தொகை தருவதாக தெரிவித்தார்.

இதனை நம்பி அவர்கள் கூறிய இரண்டு வங்கி கணக்குகளில் 8 பரிவர்த்தனைகள் மூலம் 33 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வரை செலுத்தினேன். ஆனால் கூறியபடி அவர்கள் கமிஷன் தொகையையும் தரவில்லை, முதலீடு செய்த பணத்தையும் மோசடி செய்து விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் மும்பை கார்கர் பகுதியில் தங்கியிருக்கும் நைஜீரியா நாட்டு கும்பல் மோசடி செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனால் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று நைஜீரியர்களான சைனாசா(32), உச்சே ஜான் இமேகா(47), காட்வின் இமானுவேல்(32), எபோசி ஸ்டான்லி(32) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். இந்நிலையில் ஆன்லைன் மூலம் வியாபாரம் தொடங்கும் முன்பு விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் எனவும், அறிமுகம் இல்லாத நபர்களுக்கு பணம் அனுப்பக்கூடாது எனவும் பொது மக்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.