கடலூர் மாவட்டத்தில் உள்ள கானூர் மாஞ்சோலை பகுதியில் கிருஷ்ணமூர்த்தி(40)- காயத்ரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தியுடன் சேலத்தைச் சேர்ந்த அவரது மாமா மகன் சக்திவேல்(22) தங்கி இருந்து இருவரும் தச்சு வேலை பார்த்து வந்துள்ளனர். தற்போது கிருஷ்ணமூர்த்தி புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் கொத்தனாரான பாலச்சந்திரன்(32) என்பவர் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு செப்டிக் டேங்க் கட்டப்பட்டது. நேற்று செப்டிக் டேங்க் குழிக்குள் அமைக்கப்பட்டிருந்த சாரத்தை அகற்றுவதற்காக கிருஷ்ணமூர்த்தி, பாலச்சந்திரன், சக்திவேல் ஆகியோர் ஒருவருக்கு பின் ஒருவராக மேற்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிறிய துளை வழியாக உள்ளே இறங்கினர். நீண்ட நேரமாகியும் அவர்கள் வெளியே வராததால் கிருஷ்ணமூர்த்தியின் தாய் குழிக்குள் எட்டி பார்த்துள்ளார். அப்போது மூன்று பேரும் மயங்கி கிடந்ததை கண்டு கூச்சலிட்டார்.
இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் மூன்று பேரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அப்போதுதான் மூவரும் விஷ வாயு தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் பாலச்சந்திரனுக்கு அம்மன் ராணி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கதாகும்