திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மணலூர்பேட்டை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பு பகுதியில் பாண்டியன்-விஜயா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 மகள்களும், 2 மகன்களும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியனின் மூத்த மகள் சுகுணா அதே பகுதியில் வசிக்கும் ராம்ஜி(30) என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் பாண்டியனின் வீட்டில் வசித்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் ராம்ஜி திருவண்ணாமலையில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் சுகுணாவுக்கும், ராம்ஜிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனை தட்டிக் கேட்ட விஜயாவை ராம்ஜி தாக்கியுள்ளார். இதுகுறித்து அறிந்த விஜயாவின் இளைய மகன் பரணி வீட்டிற்கு வந்து ராமஜியை தட்டி கேட்டார். அப்போது ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த ராம்ஜி கத்தியால் பரணியை குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதற்கிடையே விஜயாவுக்கும், சகோதரி கல்கி என்பவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பரணியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்து போலீசார் தப்பி ஓடிய ராம்ஜியை தேடி வருகின்றனர்.