விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஈயக்குணம் பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர் ராஜ்குமாரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அந்த நம்பர் தனியா நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாக அறிமுகப்படுத்திக் கொண்டு, கடன் தேவை என்றால் உங்களது விவரங்களை அனுப்பி வையுங்கள் என தெரிவித்தார். இதனை நம்பி ராஜ்குமார் தனது விவரங்களை அனுப்பியுள்ளார்.

இதனையடுத்து 5 லட்ச ரூபாய் கடன் தருவதாகவும், குறைந்தபட்சம் உங்களது வங்கி கணக்கில் 50 ஆயிரம் ரூபாய் இருப்பு இருக்க வேண்டும் எனவும் அந்த நபர் தெரிவித்தார். இதனை நம்பி ராஜ்குமார் சிலரிடம் இருந்து கடனாக வாங்கி 25 ஆயிரம் ரூபாய் பணத்தை தனது வங்கியில் டெபாசிட் செய்து அதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அந்த மர்ம நபருக்கு அனுப்பியுள்ளார்.

சிறிது நேரம் கழித்து ராஜ்குமாரை தொடர்பு கொண்ட மர்ம நபர் 10 நிமிடத்தில் கடன் தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தெரிவித்து, ஏ.டி.எம் அட்டையின் காலாவதி ஆகும் தேதி, ரகசிய எண், ஒடிபி ஆகியவற்றைக் கேட்டு க்கொண்டார். சிறிது நேரத்தில் ராஜ்குமாரின் வங்கி கணக்கிலிருந்து 24 ஆயிரத்து 854 ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜ்குமார் விழுப்புரம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.