டெல்லியில் கடந்த 7 ஆண்டுகளாக தீபாவளி நாளன்று பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. கடும் காற்று மாசு காரணமாக இத்தடை அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது சுற்றுசூழல் நிலை மேலும் மோசமாகி வரும் சூழ்நிலையில், பட்டாசுகள் மீதான தடை தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தீபாவளி பண்டிகையை சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, உச்சநீதிமன்றம் தற்காலிகமாக இந்த தடையை தளர்த்தியுள்ளது.

இந்த உத்தரவின் பேரில், டெல்லி மக்கள் 5 நாட்களுக்கு பட்டாசு வெடிக்க அனுமதி பெற்றுள்ளனர். இதனால், நீண்டகாலமாக பட்டாசு விற்பனையில் ஏற்பட்ட இருந்த பாதிப்பு சமநிலையில் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், பட்டாசு விற்பனையாளர்களும், பொதுமக்களும் இந்த தீர்ப்பை வரவேற்று மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர்.

ஆனாலும், இந்த அனுமதி சில கட்டுப்பாடுகளுடன் வரும் என கூறப்படுகிறது. சுற்றுசூழலை பாதிக்காத ‘பசுமை பட்டாசுகள்’ மட்டுமே பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இதே நேரத்தில், சுற்றுசூழல் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஆர்வலர்கள், இந்த தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே டெல்லியில் காற்று தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், இந்த முடிவால் மாசு மேலும் தீவிரமாகும் அபாயம் இருப்பதாக அவர்கள் எச்சரிக்கின்றனர்.

தீபாவளி காலத்தில் காற்று மாசு காரணமாக குழந்தைகள், வயதானோர் மற்றும் உடல்நலக்குறைவானோர் பல்வேறு சிரமங்களை சந்திப்பது வழக்கம். எனவே, மகிழ்ச்சியும் பாதுகாப்பும் சமநிலையாக இருக்க வேண்டும் என்பதே பரிந்துரை.