ஆப்கானிஸ்தானில் தற்போது தலீபான் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. அந்த அரசின் வெளியுறவு மந்திரியாக அமீர் கான் முத்தகி பணியாற்றி வருகிறார். அவர் முதன்முறையாக இந்தியாவுக்கு 6 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக கடந்த புதன்கிழமை காபுலிலிருந்து புதுடெல்லி புறப்பட்டு வந்தார்.
இந்த பயணத்தின் போது, மத்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட உயர்நிலை அதிகாரிகளைச் சந்தித்து பேசுகிறார் என ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்புகளில் அரசியல், பொருளாதார மற்றும் வர்த்தக தொடர்புகள் குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், டெல்லியில் முத்தகி நேற்று செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அந்த சந்திப்பில் பெண்கள் பங்கேற்க வேண்டாம் என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
முந்தைய காலங்களில் ஆப்கானிஸ்தானில் தலீபான் ஆட்சி பெண்களுக்கு கல்வி, வேலை உள்ளிட்ட துறைகளில் தடைகள் விதித்திருந்தது. அதேபோல், இப்போதும் பெண்களை புறக்கணிக்கும் வகையில் நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து பல பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. “அனைத்து பெண் பத்திரிகையாளர்களும் உடை நெறிமுறைகளை மதித்து வந்திருந்தும், அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர். சமூக ஊடகங்களில் இதற்கெதிராக கடும் விமர்சனங்கள் பதிவாகியுள்ளன.
அதே நேரத்தில், செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமீர் கான் முத்தகி, “லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு எங்களின் நாட்டில் எந்தவித இடமும் அளிக்கவில்லை. இந்தியாவுடனான உறவை அமைதியும் பரஸ்பர நலன்களும் அடிப்படையாக வலுப்படுத்த விரும்புகிறோம். பாகிஸ்தானும் அதேபோல் அமைதிக்காக செயல்பட வேண்டும்” என்று கூறினார்.
முத்தகியின் இந்த இந்திய பயணம், தலீபான் ஆட்சிக்குப் பிறகு இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளில் புதிய மாற்றத்துக்கு வழிவகுக்கும் என சர்வதேச வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. மேலும் அதே நேரத்தில் பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
