தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் பட்டாசுகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்வதை தெற்கு ரயில்வே கடுமையாகத் தடை செய்துள்ளது.
விதிமீறி இப்படிப்பட்ட பொருட்களை எடுத்துச் சென்றால், அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ரயில்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்க வேண்டுமெனவும், இந்தக் கட்டுப்பாடுகள் தீவிபத்துகளைத் தவிர்க்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், யாரேனும் பயணிகள் சந்தேகத்துக்குரிய பொருட்களை ரயிலில் எடுத்துச் செல்லும் நிலையில் கண்டால், உடனடியாக 139 என்ற ரயில்வே ஹெல்ப்லைன் எண்ணிற்கு அழைத்து தகவல் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதோடு, RPF, TTE, அல்லது ரயில் நிலைய அலுவலர்களிடம் உடனடியாக புகார் தெரிவிக்கவும் பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விதிமீறலால் ஏற்படும் எந்தவித சேதத்திற்கும் அல்லது இழப்பிற்கும் சம்பந்தப்பட்ட நபரே பொறுப்பு ஏற்க வேண்டியிருக்கும் என தெற்கு ரயில்வே தெளிவுபடுத்தியுள்ளது.
