உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், லிவ்-இன் உறவுகள் குறித்த தமது கருத்துகளால் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். பாலியாவில் உள்ள ஜனநாயக் சந்திரசேகர் பல்கலைக்கழகத்தின் 7வது பட்டமளிப்பு விழா கடந்த 7ம் தேதி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் ஆனந்திபென் படேல், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய பின்னர், பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து உரையாற்றினார்.
அப்போது அவர், “லிவ்-இன் உறவுகளின் விளைவுகளை காண விரும்பினால், ஒரு அனாதை இல்லத்திற்குச் சென்று பாருங்கள். அங்கு 15 முதல் 20 வயதுக்குட்பட்ட சிறுமிகள், ஒரு வயது குழந்தைகளுடன் வரிசையில் நிற்பதை காணலாம். இது நமது மதிப்புகளுக்கு முரணானது. இவ்வாறான உறவுகள் பேராசையிலிருந்து தோன்றுகின்றன. பெண்கள் இத்தகைய உறவுகளின் இரையாகாமல், தங்கள் வாழ்க்கையை உயர்ந்த இலக்குகளுக்காக அர்ப்பணிக்க வேண்டும். பெண் குழந்தைகளின் பாதுகாப்பு நமது பொறுப்பு,” என்று கூறினார்.
இந்த கருத்து பரவலான சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மறுநாளே (அக். 8) வாரணாசியில் நடைபெற்ற மகாத்மா காந்தி காசி வித்யாபீடத்தின் 47வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அவர் மீண்டும் இதேபோன்ற கருத்துகளை முன்வைத்தார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆனந்திபென் படேல், “எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்பு மகள்கள் சிந்தித்து செயல்பட வேண்டும். லிவ்-இன் உறவுகள் இப்போது பிரபலமாக இருக்கலாம். ஆனால் அதைத் தவிர்க்க வேண்டும். சமீபத்தில் இதுபோன்ற பல துயரமான வழக்குகள் வெளிப்பட்டுள்ளன. சில சிறுமிகளை நேரில் சந்தித்தேன்; அவர்களின் கதைகள் மனதை உருக்கும் வகையில் இருந்தன,” என்று தெரிவித்தார்.
“லிவ்-இன் உறவுகளுக்கு இரையாகாமல் இருக்க மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளேன்,” எனவும் அவர் கூறினார். மேலும் லிவ்இன் உறவில் இருந்தால் பெண்கள் 50 துண்டுகளாக வெட்டப்படுவார்கள் என்று கூறினார்.
