சேலம் மாவட்டத்தில் உள்ள தாச சமுத்திரம் அரசு நடுநிலை பள்ளியை சேர்ந்த 7 மாணவர்கள் சேலத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பங்கேற்றனர். இதனையடுத்து போட்டி முடிந்து மாணவர்கள் நேற்று மதியம் சேலத்தில் இருந்து தர்மபுரி நோக்கி செல்லும் தனியார் பேருந்து ஏறியுள்ளனர். அப்போது பேருந்து டிரைவர் மற்றும் கண்டக்டர் தாச சமுத்திரம் பேருந்து நிலையத்தில் நிற்காது என கூறியுள்ளனர். மேலும் இது இடைநில்லா பேருந்து எனக் கூறி மாணவர்களை இறக்கி விட்டனர். இதனால் கோபமடைந்த மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடம் நடந்தவற்றை கூறியுள்ளனர்.

இதனை கேட்ட பள்ளி மாணவர்களின் பெற்றோர்களும், பொதுமக்களும் தனியார் பேருந்தை தாச சமுத்திரம் பேருந்து நிறுத்தத்தில் வைத்து சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பின்னர் இனி வரும் காலங்களில் பேருந்தை நிறுத்தி செல்வதாக டிரைவரும், கண்டக்டரும் எழுதி கொடுத்த பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.