சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூரில் முத்துக்கருப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மொபைல் போனுக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டிருப்பதாகவும், உடனடியாக அவருக்கு அனுப்பப்பட்டுள்ள லிங்கில் வங்கி கணக்கு பற்றி விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இதனை உண்மை என நம்பிய முத்துக்கருப்பன் அந்த லிங்கில் வங்கி கணக்கு குறித்த விபரங்களை பதிவு செய்துள்ளார். அதன் பின் சற்று நேரத்தில் அவரது வங்கியில் கணக்கில் இருந்து ரூ.99,887 எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முத்து கருப்பன் இது குறித்து சிவகங்கை மாவட்ட போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் சிவகங்கை மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தேவி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். முதற்கட்ட விசாரணையில் இந்த பணம் மும்பையில் இருந்து எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து அந்த கணக்கை முடக்கி வைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் மானாமதுரையில் சார்லஸ் விஜயகுமார் என்பவரிடமிருந்து வங்கி கணக்கு முடக்கப்பட்டிருப்பதாக மெசேஜ் வந்துள்ளது. உடனடியாக வங்கி கணக்கு விவரங்களை கொடுக்கப்பட்ட லிங்கில் பதிவிடும்படி குடும்ப தகவல் வந்தது. அதனை தொடர்ந்து சார்லஸ் விஜயகுமார் வங்கி கணக்கு விவரங்களை பதிவேற்றம் செய்துள்ளார். அதேபோல் சற்று நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.88 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு வங்கிக்கு சார்லஸ் விஜயகுமாரின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வங்கி கணக்கையும் முடக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.