விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எடைபாலயம் பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயி. இவருக்கு திருமணம் ஆகி ராதிகா என்ற மனைவியும், மனுநீதி (6), தேவ விருதன் (3) என்ற 2 ஆண் குழந்தைகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று காலை செங்கல்பட்டில் உள்ள தன்னுடைய அக்கா வீட்டிற்கு சிவா புறப்பட்டார். அவர் தன்னுடைய டிராக்டரில் ஹாலோ பிளாக் கற்களை எடுத்துக்கொண்டு சென்றார். அப்போது குழந்தைகள் இருவரும் அவருடன் வரவேண்டும் என்று கூறியதால் அவர்களையும் அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். இவர்கள் கூட்டேரிப்பட்டு பகுதியில் உள்ள வார சந்தை அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த லாரி ஒன்று டிராக்டரின் மீது மோதியது.

இதனால் நிலை தடுமாறிய டிராக்டர் சிறிது தூரம் சென்ற நிலையில் சிவா டிராக்டரை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். அவர் டிராக்டரை நிறுத்திவிட்டு பார்த்தபோது அவருடைய இளைய மகனை காணவில்லை. அப்போது லாரியின் அடியில் குழந்தை சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. உடனடியாக சிவா தன் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை  பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். இது குறித்த தகவலின் பேரில் குழந்தையின் தாய் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு சென்று கதறி அழுதனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மயிலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.