அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டார். ஆனால், சட்டப்பேரவை தேர்தலுக்கான அணியில் அதிமுகவும் இணைந்ததை தொடர்ந்து, பாஜக தங்களை புறக்கணித்து வருகிறது என அமமுக வட்டாரங்கள் குற்றம்சாட்டியிருந்தன.

இந்த நிலையில், செப்டம்பர் 3-ம் தேதி இரவு, “அமமுக கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுகிறது” என டிடிவி தினகரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதன்மூலம், பாஜகவுடன் அவருடைய அரசியல் நட்பு முற்றுப் பெற்றது.

என்டிஏவில் இருந்து விலகிய பிறகு, நடிகர் விஜய் தலைமையிலான தவெக குறித்து கருத்து வெளியிட்ட டிடிவி தினகரன், “விஜயகாந்த் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பதைப் போல, 2026-ம் ஆண்டு தேர்தலில் விஜய் தலைமையிலான தவெகவும் அதே மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்” எனக் கூறினார்.

இதன் மூலம், தவெகவுடன் டிடிவி தினகரனும் இணைவது உறுதி ஆகும் என அரசியல் வட்டாரங்கள் கவனிக்கின்றன. ஏற்கனவே, OPS என்டிஏவில் இருந்து விலகி இருப்பதும், செங்கோட்டையனின் நிலை என்னவாக இருக்கும் என்பதும் தற்போதைய அரசியல் சூழலில் முக்கியக் கவனமாக மாறியுள்ளது.