தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், மக்கள் கடைக்குச் சென்று பொருட்களை வாங்குவதற்குப் பதிலாக, ஆன்லைன் மூலமாகவே பால் பாக்கெட் முதல் அத்தியாவசியப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வரை அனைத்தையும் குறைந்த விலையில் அலைச்சல் இல்லாமல் வாங்கும் பழக்கம் பிரபலமடைந்து வருகிறது.
இந்த ஆன்லைன் வர்த்தகம் ஒருபுறம் வசதியை அளித்தாலும், மறுபுறம் மோசடிகளையும் ஆபத்துகளையும் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களுக்குப் பதிலாக, தொடர்பே இல்லாத மற்ற பொருட்கள் அல்லது சில சமயங்களில் குப்பைகள் அனுப்பி வைக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து செய்திகளில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
உதாரணமாக, ஐபோனுக்குப் பதிலாகச் செங்கல், கைக்கடிகாரத்திற்குப் பதிலாகச் சோப்பு டப்பா போன்றவை அனுப்பப்பட்ட சம்பவங்களைப் போல, நீலகிரி மாவட்டத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியைச் சேர்ந்த ஐம்பது வயதுடைய சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர், அன்றாடச் சர்க்கரை அளவைத் தெரிந்துகொள்ளும் பரிசோதனைக் கருவியை வாங்க முடிவு செய்தார். அப்போது, அவரது முகநூல் செயலியில் தோன்றிய ஒரு விளம்பரம், அந்தக் கருவி குறைந்த விலையில் கிடைக்கும் என்றும், ஓரிரு நாளில் வீட்டிற்கே அனுப்பப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தது.
இதை உண்மை என்று நம்பிய அவர், தன் முகவரியைப் பதிவு செய்து அந்தக் கருவியை ஆர்டர் செய்து, உரிய கட்டணத்தையும் செலுத்தினார். சில நாட்களுக்குப் பிறகு வந்த பார்சலைத் திறந்து பார்த்தபோது, எதிர்பார்த்த பரிசோதனைக் கருவி இல்லாமல், அதற்குப் பதிலாக குப்பைகளும் ஒரு சிறிய பாட்டிலில் மஞ்சள் நிறத் திரவமும் மட்டுமே இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
இதன் மூலம், போலி ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், பொதுமக்கள் யாரும் சமூக வலைதளங்களில் வரும் இதுபோன்ற விளம்பரங்களை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கும் காணொலி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
