செய்தியாளரிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ், இன்றைக்கு டெல்டா மாவட்டங்கள் தண்ணீர் இல்லாமல் வாடிக் கொண்டிருக்கிறது. டெல்டாவுக்கு உரிய தண்ணீரை பெற்று தருவதற்கு முதலமைச்சர் தவறிவிட்டார். கர்நாடகாவிடம் இருந்து நமக்குரிய தண்ணீரை மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் என ஒவ்வொரு மாதமும் உரிய காலங்களில் பெற்று தர தவறியதனால்,  இன்றைக்கு குறுவை 3 லட்சம் ஏக்கர் கருகி பாலாகி போய் விட்டது.

அதேபோல சம்பா இன்றைக்கு கேள்விக்குறியாகி இருக்கிறது. சம்பாவுக்கு தண்ணி இல்லை, குறுவை பாதித்து விட்டது. எனவே பாதிக்கப்பட்ட முன்னுரை லட்சம் ஏக்கர் குறுவைக்கு ஏக்கருக்கு 35,000 நிவாரணம் வழங்கிட வேண்டுமென எங்களுடைய கழகத்தின் பொதுச்செயலாளர்,  புரட்சி தமிழர் எடப்பாடியார்  அவர்கள் கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்தை நடத்த சொல்லி இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் உடனடியாக நமக்கு சேர வேண்டிய தண்ணீரை கர்நாடகாவில் இருந்து பெற்று தர வேண்டும் எனவும், பெற்று தராத இந்த திமுக அரசை….  முதலமைச்சரை  கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல கர்நாடகம் நமக்கு உரிய அந்த தண்ணீரை தராததால்,  கர்நாடக அரசை  கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருக்கிறோம்.

9.6.2023-ம் தேதி முதலமைச்சர் ஒரு ஸ்டேட்மென்ட் கொடுத்துள்ளார். எங்களுடைய இலக்கு குறுவையில 4 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கர் சாகுபடி செய்யப்படுகிறோம். அதே போல 13 லட்சத்து 341 ஏக்கர் சம்பா சாகுபடி செய்யப்போகிறோம் என அவரே ஸ்டேட்மென்ட் கொடுத்திருக்கிறார். ஆனால் குறுவை சாகுபடி ஐந்து லட்சம் ஏக்கர் செய்யப்பட்டது. அதில் மூன்று லட்சம் ஏக்கர் கருகி விட்டது.

சம்பா சாகுபடி இன்னைக்கு இல்லாமல் போய்விட்டது. இதற்கெல்லாம் முதலமைச்சர் தான் பதில் சொல்லியாக வேண்டும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்காலத்தில் அம்மா ஆட்சி காலமாக இருந்தாலும் சரி,  அண்ணன் எடப்பாடியார் ஆட்சி காலமாக இருந்தாலும் சரி, காவேரி போன்ற பிரச்சனைகள் வரும்போது,  அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி அதுல சில முடிவுகள் எடுப்போம். ஆனால் இன்றைக்கு அனைத்து கட்சி கூட்டம் கூட்டாதது விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது. எடப்பாடியார் தொடர்ந்து டெல்டா மாவட்டங்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.