கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தின் ஒற்றப்பாலம் அருகே உள்ள அம்பலப்பாறை பகுதியில் இன்று அதிகாலை சாரல் மழை நிலவிய நிலையில், ஆட்டோ ஒன்று வேகமாக சாலையில் வந்தது. வந்த வேகத்தில் திடீரென டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால், அருகிலிருந்த பேக்கரி கடைக்குள் நேராக நுழைந்தது. எதிர்பாராத இந்த சம்பவத்தில் ஆட்டோ கடையின் முன்பக்கத்தை தாக்கியவாறே, பின்னர் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் சிக்கிக்கொண்ட நிலையில், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் கடை ஊழியர்கள் விரைவாக செயல்பட்டு ஆட்டோவை தூக்கி நிறுத்தி, ஆட்டோ டிரைவரை பத்திரமாக மீட்டனர். அதிர்ச்சியளிக்கும் விபத்தில் பெரிய உயிரிழப்பு அல்லது பெரும் சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. ஆனால் பேக்கரி கடையின் முன்புறத்தில் மட்டும் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பேக்கரி கடையின் சிசிடிவி கேமராவில் பதிவான அதிர்ச்சி தரும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. கன்ட்ரோல் இழந்த ஆட்டோ நிமிடத்தில் கடைக்குள் புகும் அந்த காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. மிகவும் குறுகிய நேரத்திலேயே நடந்த இந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
