சீனாவின் ஹெபேய் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஏற்பட்ட சாதாரணத் தலைவலி, மருத்துவ உலகையே அதிர வைக்கும் ஒரு ரகசியத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. கடந்த 23 ஆண்டுகளாகத் தனது மூளைக்குள் துப்பாக்கிக் குண்டு இருப்பதே தெரியாமல் ஒருவர் உயிர் பிழைத்திருப்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜாங்ஜியாகோ நகரைச் சேர்ந்த வாங் தியான் கிங் என்பவருக்கு கடந்த 2011-ஆம் ஆண்டு கடுமையான தலைவலியும், வலிப்பும் ஏற்பட்டது. இதற்காக மருத்துவமனைக்குச் சென்ற அவருக்கு சிடி (CT Scan) ஸ்கேன் செய்யப்பட்டது. அந்த அறிக்கையைப் பார்த்த மருத்துவர்கள் உறைந்து போயினர். வாங்கின் மூளையின் வலது பக்கத்தில் ஒரு துப்பாக்கிக் குண்டு புதைந்திருந்தது கண்டறியப்பட்டது.
இது குறித்து அவரிடம் விசாரித்தபோது, கடந்த 1988-ஆம் ஆண்டு ஒருநாள் வெளியே நடந்து சென்றபோது, தனது தலையில் ஏதோ ஒன்று வேகமாக வந்து தாக்கியதாகக் கூறினார். யாரோ ஒரு சிறுவன் கவணில் கல்லை வைத்து அடித்திருப்பான் என அவர் நினைத்துள்ளார்.
காயம் சிறியதாக இருந்ததாலும், ரத்தம் அதிகம் வராததாலும், சாதாரண மருந்துகளைப் போட்டுக் கொண்டு அந்தச் சம்பவத்தை அவர் மறந்துவிட்டார். ஆனால், அவர் கல் என நினைத்தது உண்மையில் ஒரு தோட்டா (Bullet). அது அவரது மண்டை ஓட்டைத் துளைத்துக் கொண்டு உள்ளே சென்றிருந்தது. மருத்துவ அறிவியலுக்கே சவாலாக அமைந்த இந்தச் சம்பவத்தில், அவர் உயிர் தப்பியதற்கு சில ஆச்சரியமான காரணங்கள் கூறப்படுகின்றன.
தோட்டா மிகக் குறைந்த வேகத்தில் வந்ததால், மூளையின் மிக மென்மையான பகுதிகளைத் தாக்காமல் ஒரு ஓரத்தில் தங்கிவிட்டது. அதிர்ஷ்டவசமாக அந்தத் தோட்டா எந்தவொரு முக்கிய நரம்பு மண்டலத்தையும் பாதிக்கவில்லை. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு உலோகப் பொருள் தலைக்குள் இருந்தும், எந்தவொரு உயிருக்கு ஆபத்தான தொற்றும் ஏற்படவில்லை.
மேலும் மூளையின் ஆழமான பகுதியில் குண்டு இருந்ததால், சிறிய தவறு நடந்தாலும் அவர் முடங்கிப் போகும் அபாயம் இருந்தது. இருப்பினும், பல மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு மருத்துவர்கள் வெற்றிகரமாக அந்தத் தோட்டாவை அகற்றினர். மரணத்தைத் தலைக்குள் சுமந்து கொண்டு 23 ஆண்டுகள் வாழ்ந்த வாங் தியான் கிங், தற்போது முழு ஆரோக்கியத்துடன் மருத்துவ வரலாற்றில் ஒரு அதிசயமாகப் பார்க்கப்படுகிறார்.
