அமெரிக்காவில் வேலை தேடி வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் பாபட்லா மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற அந்த இளைஞர், உயர் கல்வி முடித்துவிட்டு நல்ல வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அமெரிக்கா சென்றார்.

ஆனால், அங்கு நீண்ட நாட்களாகியும் வேலை கிடைக்காததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். குடும்ப வறுமையை நீக்க வெளிநாட்டிற்குச் சென்ற மகன், அங்கேயே உயிரை மாய்த்துக் கொண்டது அவரது கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் மகன் அமெரிக்கா செல்வதற்காக அவரது தந்தை பல லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. தற்போது மகனை இழந்த துயரம் ஒருபுறம் இருக்க, வாங்கிய கடனை எப்படி அடைப்பது என்று தெரியாமல் அந்த ஏழைத் தந்தை திகைத்து நிற்கிறார்.

இதனால் மகனின் உடலைத் தாயகம் கொண்டு வர இந்திய தூதரகத்தின் உதவியை நாடியுள்ள அந்த தந்தை, தனது மகனின் உடலை கடைசியாக ஒருமுறை பார்க்க கண்ணீருடன் காத்திருக்கிறார். வேலையில்லா திண்டாட்டம் மற்றும் மன அழுத்தம் காரணமாக ஒரு இளம் உயிர் பறிபோனது இந்திய இளைஞர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.