பள்ளியில் விளையாடிக்கொண்டிருந்தபோது நாணயத்தை விழுங்கி மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட 5 வயது சிறுமியை, தலைமை ஆசிரியர் தனது துரித முடிவால் உயிரைக் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் துருக்கியில் நடந்துள்ளது. துருக்கியின் சான்லியுர்பா மாகாணத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில், இடைவேளை நேரத்தில் 5 வயது சிறுமி ஒருவர் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கையில் வைத்திருந்த நாணயத்தை வாயில் போட, அது சிறுமியின் சுவாசக் குழாயில் சிக்கிக் கொண்டது.
இதனால் அந்த சிறுமிக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு, முகம் நீல நிறமாக மாறத் தொடங்கியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்வதறியாது திகைத்தனர். சத்தம் கேட்டு ஓடி வந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், நிலைமையின் தீவிரத்தை நொடிப்பொழுதில் உணர்ந்தார். உடனடியாகச் செயல்பட்ட அவர், முதலுதவி சிகிச்சையான ‘ஹெய்ம்லிக் மேனுவர்’ (Heimlich Maneuver) முறையைப் பயன்படுத்தினார்.
بسرعة بديهة وإتقان للإسعافات.. مدير مدرسة بشانلي أورفا التركية ينقذ طفلة تبلغ من العمر 5 سنوات من الاختناق بقطعة نقدية عبر تطبيق “مناورة هيمليك”. pic.twitter.com/fYzHeSFEXe
— موسكو | 🇷🇺 MOSCOW NEWS (@M0SC0W0) April 30, 2026
சிறுமியைப் பின்னால் இருந்து கட்டியணைத்து, வயிற்றுப் பகுதியில் குறிப்பிட்ட அழுத்தத்தைக் கொடுத்தார். சில நொடிகள் நீடித்த இந்த போராட்டத்திற்குப் பிறகு, சிறுமியின் தொண்டையில் சிக்கியிருந்த நாணயம் வெளியேறியது. அதன் பின் சிறுமி சீராக சுவாசிக்கத் தொடங்கினார்.
சரியான நேரத்தில் பதற்றமடையாமல் முதலுதவி அளித்த தலைமை ஆசிரியரின் இந்தச் செயல் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆசிரியர்களுக்குக் கற்பித்தல் மட்டுமல்லாமல், பேரிடர் மற்றும் அவசர கால முதலுதவி பயிற்சிகளும் எவ்வளவு முக்கியம் என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி என சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தற்போது அந்த சிறுமி நலமுடன் இருப்பதாகவும், தக்க சமயத்தில் உயிர்காத்த தலைமை ஆசிரியருக்கு சிறுமியின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
