பிரிட்டனைச் சேர்ந்த 38 வயதுடைய ஜாக்கி லின் என்பவர், தனது பற்களை அழகுபடுத்துவதற்காகத் துருக்கி நாட்டிற்குச் சென்று மேற்கொண்ட சிகிச்சை மிகப்பெரிய துயரத்தில் முடிந்துள்ளது.

ஹார்மோன் குறைபாட்டால் பற்கள் பலவீனமடைந்த நிலையில், குறைந்த செலவில் சிகிச்சை பெறலாம் என்ற நம்பிக்கையில் துருக்கி சென்ற அவருக்கு, அங்குள்ள மருத்துவர்கள் முறையான தகவல்கள் இன்றி ஒரே நேரத்தில் 15 ரூட் கெனால் சிகிச்சைகளைச் செய்துள்ளனர்.

இதனால் ஏற்பட்ட கடுமையான தொற்றும், அதீத வலியும் அவரது உடல் முழுவதும் பரவியதுடன், ஒரு கண்ணின் பார்வையையே பறிக்கும் நிலைக்குச் சென்றது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், தொற்று மேலும் பரவாமல் தடுக்க அவரது அனைத்து இயற்கை பற்களையும் பிடுங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதற்காகத் தனது தந்தையிடம் கடனாகப் பெற்ற ரூ.19 லட்சம் பணத்தையும் அவர் செலவிட்டுள்ளார். 38 வயதிலேயே இயற்கை பற்கள் அனைத்தையும் இழந்து, உணவைக் கூடச் சரியாக உண்ண முடியாமல் தவித்து வரும் ஜாக்கியின் நிலை, வெளிநாடுகளில் மலிவு விலை சிகிச்சையை நாடிச் செல்வவோருக்கு ஒரு பெரிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.