ராஜஸ்தான் மாநிலம் ஜவாய்பந்த் பகுதியில் மகேந்திர குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் உடல் நலக்குறைவு காரணமாக சிரோகி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மகேந்திர குமாரை கவனித்துக் கொள்வதற்காக அவரது மனைவி ரேகா தன்னுடைய 3 குழந்தைகளுடன் மருத்துவமனையில் இருந்துள்ளார். அதனை தொடர்ந்து கணவர் தங்கி இருந்த வார்டு அருகே மூன்று குழந்தைகளுடன் இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது சிறிது நேரம் கழித்து எழுந்து பார்த்தபோது ஒரு மாத ஆண் குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வெளியே சென்று பார்த்துள்ளார். அப்போது நாய் ஒன்று குழந்தையை இழுத்துச் சென்றதை கண்டுள்ளார்.

இதனையடுத்து அங்கு இருந்தவர்களின் உதவியுடன் நாயை துரத்து விட்டு பார்த்தபோது உடல் முழுவதும் காயமடைந்த குழந்தை இறந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  பச்சிளம் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின் குழந்தையின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு மருத்துவமனையின் அலட்சியமே காரணம் என மகேந்திர குமார் குற்றம் சாட்டியுள்ளார். ஒரு மாத ஆண் குழந்தையை நாய் கடித்து குதறிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.