உலக அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் மிக முக்கியமான வழித்தடமாகக் கருதப்படும் ஹார்முஸ் நீர்ச்சந்தியில்கப்பல்கள் பாதுகாப்பாகக் கடந்து செல்ல ஈரான் பெரும் தொகையைக் கட்டணமாக வசூலிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச கப்பல் போக்குவரத்துச் செய்திகளை வெளியிடும் ‘லாயிட்ஸ் லிஸ்ட்’ நிறுவனம் இது தொடர்பாக ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ஹார்முஸ் வழியாகச் செல்லும் ஒவ்வொரு எண்ணெய் டேங்கர் கப்பலும் பாதுகாப்பாகக் கடந்து செல்ல, தலா 2 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.17 கோடி) கட்டணமாகச் செலுத்த வேண்டும் என ஈரான் நிபந்தனை விதித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது நிலவி வரும் நெருக்கடியான போர் சூழலைப் பயன்படுத்தி, உலகின் முக்கிய வர்த்தகப் பாதையான ஹார்முஸ் நீர்ச்சந்தியைத் தனது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர ஈரான் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நீர்ச்சந்தி வழியாகவே உலக நாடுகளுக்குத் தேவையான கச்சா எண்ணெய்யில் பெரும் பகுதி கொண்டு செல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானின் இந்த அதிரடி நடவடிக்கை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது. ஒரு கப்பலுக்கு 17 கோடி ரூபாய் என்பது மிக அதிகப்படியான தொகையாகக் கருதப்படுகிறது.
மேலும் இந்த கூடுதல் கட்டணம் இறுதியில் நுகர்வோர் மீதே சுமத்தப்படும் என்பதால், உலக நாடுகளில் எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஏற்கெனவே மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், ஈரானின் இந்த நடவடிக்கை சர்வதேச கடல்வழி வர்த்தகத்தில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
