லெபனானின் தெற்குப் பகுதியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ரஷ்ய செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த செய்தியாளர்கள், இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர் ஸ்டீவ் ஸ்வீனி மற்றும் அவரது ஒளிப்பதிவாளர் அலி ரிடா ஆகியோர் அல்-காஸ்மியா பாலம் அருகே படப்பிடிப்பில் இருந்தபோது, அவர்கள் நின்ற இடத்திலிருந்து வெறும் பத்து மீட்டருக்கும் குறைவான தொலைவில் ஏவுகணை வந்து விழுந்தது.
இந்தத் தாக்குதலின் காட்சிகள் கேமராவில் பதிவாகியுள்ளன; ஏவுகணை வரும் சத்தத்தைக் கேட்டவுடன் ஸ்வீனி துரிதமாகச் செயல்பட்டுத் தற்காத்துக்கொண்டார். இந்தத் தாக்குதலில் காயமடைந்த இருவரும் தற்போது உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாங்கள் பத்திரிகையாளர்கள் என்பதற்கான அடையாள அட்டைகளை அணிந்திருந்த போதிலும், இஸ்ரேலியப் படைகள் தங்களை இலக்கு வைத்து வேண்டுமென்றே தாக்கயதாக ஒளிப்பதிவாளர் அலி ரிடா குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் குண்டுவெடிப்பின் போது அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறிய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. செய்தியாளர்கள் இருவரும் அபாயக் கட்டத்தைத் தாண்டி நலமுடன் இருப்பதாக ரஷ்ய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
