மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேலின் முக்கிய எரிசக்தி மையமான ஹைபா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் இந்த ஏவுகணைகளை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகளால் தடுக்க முடியாததால், அவை நேரடியாக சுத்திகரிப்பு நிலையத்திற்குள் விழுந்து வெடித்தன.

இதன் காரணமாக அங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டு, அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. இஸ்ரேலின் உள்நாட்டு எரிபொருள் தேவையில் சுமார் 60 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் இந்த நிலையம் தாக்கப்பட்டிருப்பது அந்த நாட்டுக்கு பெரும் பொருளாதார மற்றும் எரிசக்தி பின்னடைவாகக் கருதப்படுகிறது.

மேலும் ஈரானின் இந்தத் தாக்குதல், முன்னதாக இஸ்ரேல் ஈரானிய எண்ணெய் கிடங்குகள் மற்றும் எரிவாயு உற்பத்தி நிலையங்கள் மீது நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹைபா மட்டுமின்றி, தெற்கு இஸ்ரேலில் உள்ள அஷ்டோட் நகரில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தையும் ஈரான் இலக்கு வைத்துள்ளது.

இந்தப் போர் 21-வது நாளை எட்டியுள்ள சூழலில், ஈரான் தனது தாக்குதலை வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் பிற எண்ணெய் வளங்கள் மீதும் விரிவுபடுத்தி வருகிறது. இந்தத் தொடர் மோதல்களால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டு, உலகளாவிய பொருளாதாரப் பதற்றம் அதிகரித்துள்ளது.