அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதலில், அந்த நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் முக்கிய ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டனர். இதனால் மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், உலக நாடுகளின் பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் வான்வழியாகக் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவரது மனைவி, மகள் உள்ளிட்ட குடும்பத்தினர் இத்தாக்குதலில் கொல்லப்பட்டனர். மேலும், பாதுகாப்புத் துறை அமைச்சர் அமீர் நசீர்ஜடே, புரட்சிகரக் காவல் படைத் தளபதி முகமது பாக்பூர், முக்கிய அதிகாரி அலி லரிஜானி ஆகியோரும் பலியாகினர். மூத்த ராணுவத் தளபதியான குலாம்ரெசா சுலைமானி மற்றும் அவரது துணைத் தளபதி சையது கரிஷி ஆகியோர் தங்கியிருந்த கூடாரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டதை ஈரான் உறுதி செய்துள்ளது.
ஈரான் நடத்தி வரும் பதிலடித் தாக்குதல்களால் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள படைத் தளங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. உலகின் மிக முக்கிய கடல்வழிப் பாதையான ‘ஹார்மூஸ் ஜலசந்தியை’ ஈரான் முடக்கியுள்ளதால், நூற்றுக்கணக்கான கப்பல்கள் கடலிலேயே தேங்கிக் கிடக்கின்றன. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சரக்குகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதுடன், எரிபொருள் விலைவாசியும் கடுமையாக உயர்ந்துள்ளது.
ஈரானின் இந்த நடவடிக்கைக்குப் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் ஜப்பானும் இணைந்து கூட்டாகக் கண்டனம் தெரிவித்துள்ளன. எரிசக்தி சந்தையில் ஸ்திரத்தன்மையை உருவாக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஹார்மூஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதை உறுதி செய்யத் தயாராக இருப்பதாகவும் அந்த நாடுகள் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளன. மேலும் வளைகுடா நாடுகளில் வசிக்கும் பல்வேறு நாட்டு குடிமக்களின் பாதுகாப்பும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளதால் சர்வதேச அளவில் பதற்றம் நீடிக்கிறது.
