உடல்நலம் குன்றிய தனது சொந்த மகளுக்கு உணவோ, மருத்துவ சிகிச்சையோ அளிக்காமல், ஈவிரக்கமின்றிப் பட்டினி போட்டுச் சாகடித்த பெற்றோருக்கு நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.

அதாவது 32 வயதான ஸ்டெஃபி டேவிஸ் என்ற பெண், நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் படுக்கையிலேயே முடங்கியிருந்தார். கடந்த சில மாதங்களாக அவருக்கு முறையான உணவோ அல்லது பராமரிப்போ அவரது பெற்றோரான டெய்லி மற்றும் அவரது கணவரால் வழங்கப்படவில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு மருத்துவக் குழுவினர் அந்த வீட்டிற்குச் சென்றபோது, ஸ்டெஃபி எலும்பும் தோலுமாகக் காட்சியளித்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மருத்துவர்களின் ஆய்வில், ஸ்டெஃபியின் உடலில் ஆழமான மற்றும் சீழ் பிடித்த காயங்கள் எலும்பு வரை ஊடுருவியிருந்தது தெரியவந்தது. அவரது அறையில் துர்நாற்றம் வீசியதுடன், தலைமுடியில் பேன்களும், முகத்தைச் சுற்றி ஈக்களும் மொய்த்துக் கொண்டிருந்தன. போதிய உணவின்றி ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் உடலில் ஏற்பட்ட நோய்த்தொற்று (Sepsis) காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டது.

நீதிமன்ற விசாரணையின் போது, ஸ்டெஃபி இறப்பதற்கு 36 மணி நேரத்திற்கு முன்புதான் அவரிடம் பேசியதாக அவரது தாய் வாதிட்டார். ஆனால், ஸ்டெஃபி அதற்குப் பல நாட்களுக்கு முன்பே உயிரிழந்துவிட்டதை ஆதாரங்களுடன் நீதிமன்றம் நிரூபித்தது. ஸ்டெஃபியின் மொபைல் போன் செய்திகளைச் சோதித்தபோது, அவர் பல மாதங்களாகப் படுக்கையிலிருந்து எழ முடியாமல் பெற்றோரிடம் உதவி கேட்டு கெஞ்சியதும், ஆனால் அவர்கள் அதனைத் திட்டமிட்டுப் புறக்கணித்ததும் அம்பலமானது.

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி கூறுகையில், “பெற்றோர்கள் தங்கள் மகளின் மீது எவ்வித அன்பும் காட்டவில்லை. அவர் வலியால் துடித்துக் கொண்டிருந்தபோது, இவர்கள் எவ்விதக் கவலையுமின்றித் தங்களது வாழ்க்கையைச் சாதாரணமாக வாழ்ந்துள்ளனர். ஆரம்பக்காலத்திலேயே சிகிச்சை அளித்திருந்தால் ஸ்டெஃபியின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும்” எனக் கடும் கண்டனம் தெரிவித்தார்.

தனது பொறுப்பைச் சரிவரச் செய்யாத ‘மோசமான தந்தை’ என ஸ்டெஃபியின் தந்தை ஒப்புக்கொண்ட நிலையில், இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சொந்த மகளையே தனிமைப்படுத்திச் சாகடித்த இந்தப் பெற்றோரின் செயல் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.