ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த மூன்று வாரங்களாகத் தீவிரமான வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இதற்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த மோதலால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.தற்போது இந்தப் போரில் அமெரிக்கா முதன்முறையாக ‘பங்கர் பஸ்டர்’ எனப்படும் நிலத்தடி இலக்குகளைத் துளைத்துச் செல்லும் சக்திவாய்ந்த குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளது.
சுமார் 2,267 கிலோ எடை கொண்ட இக்குண்டுகள் மூலம், ஹார்முஸ் ஜலசந்தி அருகே நிலத்தடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஈரானின் ஏவுகணைத் தளங்கள் தகர்க்கப்பட்டுள்ளன. கான்கிரீட் கட்டுமானங்களைத் தகர்த்துச் சென்று வெடிக்கும் திறன் கொண்ட இந்த ஆயுதம், ஈரானின் தற்காப்பு அரண்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
