ஈரான் உடனான போரில் அமெரிக்காவை இஸ்ரேல் கட்டாயப்படுத்தி இழுத்துவிட்டதாக எழுந்துள்ள புகார்களை அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக மறுத்துள்ளார். ஈரானின் ‘சவுத் பார்ஸ்’ எரிவாயு உற்பத்தி தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நெதன்யாகு, “இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிடம் ஆலோசிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. எதைச் செய்ய வேண்டும் என்று அவரிடம் நாங்கள் கேட்கப்போவதும் இல்லை.

இந்தத் தாக்குதலை இஸ்ரேல் தன்னிச்சையாகவே நடத்தியது,” என்று குறிப்பிட்டார். மேலும், ஈரானுடனான அடுத்தகட்டத் தாக்குதல்களை நிறுத்துமாறு ட்ரம்ப் கேட்டுக்கொண்டதாகவும், அதனை இஸ்ரேல் பின்பற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார். பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மீதான தாக்குதலின் போது, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து போர் தீவிரமடைந்தது.

இதுகுறித்து வெள்ளை மாளிகையில் பேசிய அதிபர் ட்ரம்ப், இஸ்ரேல் தங்களை வற்புறுத்தவில்லை என்று கூறினார். “உண்மையில், ஈரானுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தோம். ஆனால் அவர்கள் (ஈரான்) முதலில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். எனவே, ஒருவேளை நான் தான் இஸ்ரேலை இந்தப் போரில் ஈடுபட கட்டாயப்படுத்தியிருக்கக்கூடும்,” என்று அவர் நக்கலாகப் பதிலளித்தார்.

இதற்கிடையில், அமெரிக்காவின் சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் ஜோசப் கென்ட் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். இது அமெரிக்காவின் போர் நிலைப்பாட்டில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் சக்திவாய்ந்த ‘லாபி’ (Lobby) கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே அமெரிக்கா இந்தப் போரில் குதித்துள்ளதாகத் தனது ராஜினாமா கடிதத்தில் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் இஸ்ரேலிய அதிகாரிகள் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்தி, போருக்குச் சாதகமாக அவர்களை மாற்றியதாகவும் அவர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இது அமெரிக்க அரசியலில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.