அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் 20 நாட்களைக் கடந்தும் தீவிரமடைந்து வரும் நிலையில், கத்தாரில் உள்ள எரிவாயு திட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழலால் உலகளாவிய எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, இந்தியா தனது எரிவாயு தேவையில் 47 சதவீதத்தைக் கத்தாரிலிருந்து இறக்குமதி செய்கிறது. தற்போது கத்தாரில் உள்ள எரிவாயு உற்பத்தி தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால், இந்தியாவில் எல்பிஜி (LPG) சிலிண்டர் விலையில் பெரும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே இந்தியாவில் வணிக ரீதியிலான சிலிண்டர் விநியோகத்தில் தட்டுப்பாடு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

ஈரானின் பதிலடி அமெரிக்கா எதிர்பார்க்காத வகையில் மிகக் கடுமையாக உள்ளது. ஈரானால் அமெரிக்காவின் அதிநவீன எஃப்-35 (F-35) போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, போர் மேலும் தீவிரமடைந்துள்ளது. தங்களுக்கு நீண்ட காலம் போர் புரியும் அனுபவம் இருப்பதாக ஈரான் எச்சரித்துள்ள நிலையில், இந்த மோதல் இன்னும் சில மாதங்களுக்கு நீடிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

போரை எதிர்கொள்ளவும், எதிர்தரப்பை முறியடிக்கவும் சுமார் 200 பில்லியன் டாலர் (சுமார் ₹18 லட்சம் கோடிக்கு மேல்) கூடுதல் நிதி வழங்க வேண்டும் என அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது. இது அமெரிக்கா நீண்ட காலப் போருக்குத் தயாராகி வருவதைக் காட்டுகிறது.

ஆரம்பத்தில் ஈரான் மீது தரைப்படைத் தாக்குதல் நடத்தப்படும் என அதிரடியாகப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தற்போது தனது நிலையில் இருந்து சற்று பின்வாங்கியுள்ளார். எந்தச் சூழலிலும் அமெரிக்க வீரர்களை ஈரானுக்குள் தரைப்படைத் தாக்குதலுக்கு அனுப்பப் போவதில்லை என அவர் சமீபத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விரைவில் போர் முடிவுக்கு வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால் கள நிலவரமோ உலகப் பொருளாதாரத்தையே உலுக்கும் வகையில் மோசமடைந்து வருகிறது.