அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போர் 20 நாட்களைக் கடந்தும் நீடித்து வரும் நிலையில், ‘ஹோர்முஸ்’ ஜலசந்தியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஈரான், அதன் மூலம் உலக நாடுகளின் பொருளாதார நரம்பைத் தன் வசம் ஈர்த்துள்ளது.

ஈரான் இத்தனை நாட்கள் போரில் தாக்குப்பிடிக்கும் என்று அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ எதிர்பார்க்கவில்லை. அமெரிக்க ஏவுகணைகள் ஈரானுக்குப் பாதிப்பை ஏற்படுத்தினாலும், ஈரான் அளித்து வரும் பதிலடி உலக நாடுகளைத் திகைக்க வைத்துள்ளது. குறிப்பாக, சர்வதேச கடல் வர்த்தகத்தின் முக்கியப் பாதையான ‘ஹார்முஸ்’ ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளது அமெரிக்காவிற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.

இந்த வழித்தடம் மூடப்பட்டதால், உலகளாவிய விநியோகச் சங்கிலி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை சர்வதேச சந்தையில் விண்ணைத் தொட்டுள்ளது. இதனால் உலகின் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, அமெரிக்காவின் நட்பு நாடுகளே தற்போது அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

போர்க்களத்தில் மல்லுக்கட்டும் ஈரான், மற்றொரு புறம் இந்தச் சூழலைப் பயன்படுத்தி தனது கஜானாவை நிரப்பி வருகிறது. உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இருப்பு (208 பில்லியன் பேரல்) ஈரானிடம் உள்ளது. இதற்கு முன் அமெரிக்கத் தடைகளால் எண்ணெய் விற்பனை செய்ய முடியாமல் இருந்த ஈரான், தற்போது விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி நாளொன்றுக்கு சுமார் 14 கோடி டாலர் (சுமார் ₹1,100 கோடிக்கு மேல்) வருமானம் ஈட்டி வருகிறது.

கேப்லர் (Kpler) தரவு பகுப்பாய்வு நிறுவனத்தின்படி, போருக்கு மத்தியிலும் சுமார் 2.4 கோடி பேரல் கச்சா எண்ணெய் ஹோர்முஸ் வழியாகக் கடந்து சென்றுள்ளது. அமெரிக்கா இந்த கப்பல்களைத் தடுக்க முற்பட்டால் எரிசக்தி தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் என்பதால், அமெரிக்காவே மௌனம் காக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சுருக்கமாகச் சொன்னால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்த இந்தப் போரில் ஈரான் நிலைகுலையாமல் நிற்பது மட்டுமன்றி, பொருளாதார ரீதியாகவும் பலமடைந்து வருவது உலக அரசியலில் முக்கியத் திருப்பமாகக் கருதப்படுகிறது.