கடலூர் மாவட்டத்தில் உள்ள மணம்தவிழ்ந்தபுத்தூர் கிராமத்தில் தனலட்சுமி(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று மேல்அருங்குணம் பகுதியில் மணிலா அறுவடைக்காக சென்றுள்ளார். இந்நிலையில் பயிரை சேதப்படுத்தி வரும் காட்டுப்பன்றியை கட்டுப்படுத்துவதற்காக சுப்புராயன் என்பவர் நிலத்தை சுற்றி மின்வேலி அமைத்துள்ளார். அந்த மின்வேலியை எதிர்பாராதவிதமாக தனலட்சுமி மிதித்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தனலட்சுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.