கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து பயணிகளுடன் புவனகிரி வழியாக சாமியார்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பி.முட்லூர் எம்.ஜி.ஆர் சாலை பேருந்து நிறுத்தத்தில் வைத்து 3 கல்லூரி மாணவர்கள் பேருந்தில் ஏறியுள்ளனர். அப்போது கண்டக்டர் மாணவர்களிடம் டிக்கெட் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு மாணவர்கள் தங்களது கல்லூரி அடையாள அட்டையை காண்பித்துள்ளனர்.

அப்போது அடையாள அட்டையை காண்பித்து பேருந்தில் பயணம் செய்ய முடியாது, டிக்கெட் எடுக்க வேண்டும் என கண்டக்டர் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டு அந்த மாணவர்கள் கண்டக்டரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை பார்த்ததும் டிரைவர் பரங்கிப்பேட்டை பேருந்து நிலையத்திற்குள் சென்று பேருந்தை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கண்டக்டர் மீது வழக்குபதிவு செய்ய வேண்டும் என மாணவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதே போல கண்டக்டரும் மாணவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனை அறிந்த பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளைக்கு செல்லும் 7 அரசு பேருந்துகளை சேர்ந்த ஓட்டுநர்களும், கண்டக்டர்களும் பேருந்துகளை பரங்கிப்பேட்டை பேருந்து நிலையத்தில் நிறுத்தி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பிறகு அவர்கள் போராட்டத்தை கைவிட்டு பேருந்துகளை எடுத்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.